தஞ்சை பயணம்

Monday, July 14, 2014
வணக்கம் ,

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு எழுதுவதற்கு சில மணி நேரம் ஓதிக்கியுள்ளேன் 

எப்பொழுதும் சம காலத்து நிகழ்வுகளின் தாக்கத்தின் வெளிப்பாடகவே எமது பதிவுகள் இருந்திருகிறது ,இம்முறையும் எமது சமிபத்திய பயணத்தின் அனுபவத்தினை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்

சமிபத்தில் தஞ்சை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது ,பல முறை வேலை நிமித்தமாக தஞ்சை சென்றுள்ளேன் ,ஆனால் இம்முறை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் சென்றேன். கொண்ட எண்ணம் நிறைவடைந்ததில் பாக்கியம் பெற்றவனானேன். 

அந்த எண்ணம்!  பெருவுடையானை  தொழுவது மற்றும் எமது தாய் வழி சொந்த ஊரான திருவெண்காட்டில் கண்டு எடுத்த சிவ பார்வதி சிலையினை கண்டு மகிழ்வது .

ஆம் இரண்டுமே சோழர் பெருமைக்குரியவை. அவற்றை பார்க்கும் போதும் சரி ,எழுதும் போதும் சரி, அப்படியே கால எந்திரத்தில் அதி வேகமாக ஆயிரம் வருடங்கள் பின் நோக்கி சென்று.. இவைகளுக்கெல்லாம் தூண்டுதலாக இருந்த அந்த மா மன்னனை ஒருமுறை தரிசித்து வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது

ஆம் ! அவன் தான் ராஜ ராஜன் என்று அழைக்கப்படும் அருள் மொழி வர்மன் .அகண்ட தமிழகத்தை ஆண்டவன். அரசர்களுக்கெல்லாம் அரசனானவன், தமிழர் வரலாறுகளில் பொன் ஏட்டில் பொறிக்கப்பட வேண்டியவன் .அனைவரது மனத்திலும் நீக்கமற இடம் பிடித்தவன். வாழ்வியல் சிந்தனைகள் கொண்ட ஒரு தீர்க்கதரிசி.    

தஞ்சை சென்றவுடன் 

முதலில் சரஸ்வதி மஹால் சென்று சோழர் ,நாயக்க மற்றும் மராட்டிய காலத்து சிலைகள் ,செப்பேடுகள் மற்றும் பல அக்காலத்தைய பொருள்களை பார்த்தோம்.ஒவ்வொரு விடையங்களும் ஒவ்வெரு வாறு இருந்தன.

நான் சிதறாமல் முழு கவனத்தையும் வைத்தது சிவ பார்வதி  சிலை மீது தான், நாயக்கர் மகாலில் நுழைந்தவுடன் இடது பக்கம் அந்த சிலை வைக்கப் பெற்றிருந்தது , கண்டவுடன் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ,  சற்று அருகில் சென்று நான் திருப்தி அடையும் அளவிற்கு முதலில் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் , பின்பு ஒரு பத்து நிமிடங்கள் அந்த சிலையினை முன்னும் பின்னும் கண்டு வியந்தேன். அற்புதம் ! அற்புதம் !அற்புதம் ! ஒரு முப்பரிமான வெண்கல சிலை ஆயிரம் வருடங்களுக்கு முன்  வார்க்கப்பட்டு உளிபடாமல்  மெருகேற்றி இருகிறார்கள்,  மீண்டும் மனம் அற்புதம் ! அற்புதம் ! என்றது .


நான் படித்ததுண்டு பல்லவர் கற்சிலை உலகத்தில் எவராலும் வடிவமைக்க முடியாத அளவிற்கு நேர்த்தி உடையது என்று , அதற்கு மேல் ஒரு படி சென்று செப்பு சிலை மூலம் மனிதனின்  கலை அறிவை அடிமை படுத்த முடியும் என்பதற்கு சோழர் காலத்து சிலைகலை வடிவமைதர்களோ என்னமோ  . அதும் குறிப்பாக இந்த சிவ பார்வதி இரு சிலைகளும் அவற்றில் முதன்மை இடத்தை பிடிப்பதக எமது என்னம்
.

சிவன் / இறைவன் ஒரு விவசாயி பாதிரத்தில் வடிவமைகப்பட்டு   உலோகத்தில் வார்க்கப்பட்டு தெய்வாம்சம் பொருந்தும் அளவிற்கு மெருகேற்ற பட்டு
இருக்கிறார். சாதாரண மனிதராக இறைவன் இருப்பதால் இரண்டு  வெறும் கைகளுடன், ஆயுதங்களோ ,முத்திரைகளோ இல்லாமல் இருக்கிறான்.தனக்கே உரிய அம்சமான நாகத்தினை தலைப்பாகையாக கொண்டுள்ளான். அது சிவனின் சடைமுடியை சித்தரிப்பது போலவும்,தலைபாகை போலவும்,நகத்தை போலவும் அமைந்து இருக்கும் விதம் அற்புதம் ,மேலும் பிறை நலாவயும் , ஊமத்தை மலரையும் தலைப்பாகை ஊடே செருகி இருக்கிறார் அந்த சிற்பி .மெல்லிய தேகம் குறைந்த பட்ச ஆடை அணிகலன்,இறைவனை மனிதத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டு இருக்கிறார்.

பார்வதி சிவனின் பக்கம் சாய்ந்து புன் சிரிப்புடன், நளினத்தையும் ,சுதந்திரத் தன்மையும் ஒரு சேர பெற்று இருக்கிறாள் .வலது கையில் முத்திரையும் இடது கையை தொங்க விட்டு ஒரு எளிய உழவனின் மனைவி எவ்வாறு இருப்பாளோ அவ்வாறு வடிக்கப் பட்டு இருக்கிறாள்,ஆடைகளின் மடிப்பு, அழகிற்காக அதில் செருகப்பட்டு இருக்கும் குஞ்சம், அணிகலன், தலை கிரிடம் அனைத்தும் அழகு.
 
உலோகத்தில் சிலைகள் வடிப்பது அவ்வளவு எளிதல்ல, நான் மேலை நாடுகள் ( என்று அழைக்கப் படும்) செல்லும் பொது இரும்பினால் வடிவமைக்கப்பட்ட சிலைகளை மட்டுமே கண்டு இருக்கிறேன், பெரும்பாலும் அவை  குதிரை ,அதன் மேல் அமர்ந்து இருக்கும் அரசன் ,காவலாளி,சிப்பாய் ,படைத்தளபதி, மிருகங்கள் போன்றவைகளே அதிகம் பார்த்து இருக்கிறேன். அவை அனைத்தும் தசை ,நரம்பு,ரோமம்,தலை மயிர்,ஆடைகள் போன்ற நுண்ணிய விவரங்களோடு இருக்கும்.பல இடங்களில் அவை முப்பரிமான சிலைகளாகவும்,புடைப்பு + முப்பரிமான சிலகளாக அமைந்து இருப்பதாக எமது எண்ணம்.இவ்வாறு நுண்ணிய தேக விவரங்களோடு செய்யப்படும் சிலைகள் வீரத்தையும் ,பெருமிதத்தையும் தானாகவே பார்ப்பவரின் மனதில் விதைத்து விடுகிறது. ஆனால் அவைகளில் ஏதோ குறைவதாக தோன்றுகிறது. ஆம் ! அது துல்லியமும் உயிரோட்டமும். அது இல்லையெனில் கலை முழுமை பெயராத சிலைகலாகவே இருந்து விடுகிறது.

 தற்போதைய தென் இந்தியாவில் நான் அதிகம் வெண்கல சிலைகளை பார்த்து இருக்கிறேன் ,அனைவரும் அறிந்த வாரே வெண்கல சிலைகள் ஐம்பொன் சேர்த்து செய்யப்படுபவை. இந்த குப்பிட்ட சிலை ஐம்பொன்னா அல்லது வெறும் செப்பு மட்டுமா என்று எனக்கு துல்லியமாக தெரியவில்லை.எமது புரிதலின் படி அது மூன்றுக்கு மேற்ப்பட்ட உலோகங்களின் கூட்டாகவே அமைந்து இருப்பதற்கு சாத்தியம்.வெண்கல சிலைகளில் செப்பு அதிகம் கலக்கப்படும் அதனால் சற்று பச்சை நிறம் அடைந்து இருக்கிறது.மேலும் இச் சிலை எமது தாய் வழி ஊரான திருவெண்காட்டில் இருக்கும் சுவேய்தரனியம் திருக்கோவிலுக்கு ராஜ ராஜனால் அருளப்பட்டது. எங்கு செய்தார்கள் ,யார் செய்தார்கள் என்ற விவரங்கள் எனக்கு தெரியவில்லை.இவ் இரு சிலைகளும் நேர்த்தியான உடற்கூறியல் மற்றும் துல்லியமான  தலை உடல் விகிதங்களுக்காக உலகம் போற்றப்படும் உருவங்கள்.

சுவாமிமலை ஊரில் வெண்கல சிலைகள் செய்கிறார்கள், அதிகம் நவீன தொழில்நுட்ப உதவி இல்லாமல் தெய்வவாம்சம் பொருந்தி செய்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
 காங்கிரஸ் தலைமை உதவியுடன் கப்பூர் போன்ற நபர்கள் பெயரிய அளவில் பழங்காலத்து சிலைகளை திருடுவதை அரசோ அல்லது இந்த தமிழ் மக்களோ தடுத்து இருந்தால் , வெளிநாட்டவர், உள் நாட்டவர் இடையே புதிய வெண்கல சிலைகளுக்கு தேவைகள்  இருந்து இருக்க வாய்ப்பு இருந்து இருக்கும் ,செல்வந்தர்களும், பணம் படைத்தவர்களும் இந்த கலை வளர்வதற்கு மேலும் உதவி இருப்பார்கள்.பழைய முறையில் வெண்கல தெய்வ சிலை விலை அதிகம்.சுவாமிமலை சென்று அப்படி ஒரு சிலை வாங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை! அது உமா தேவி மற்றும்  நடராஜன் (எ) கூத்தாண்டவர் சிலையாக இருக்க விருப்பம்.

கலை கூடத்தை பார்த்து விட்டு , மராட்டிய அரண்மனை பார்க்க நேரம் இல்லாமல் பெருவுடையான் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தோம். வழியில் சில பல சமோசாக்கள் ,வடைகளை விழுங்கிவிட்டு, நாட்டு சர்க்கரை பால் குடித்து விட்டு கோவிலுக்கு நடந்தே சென்றடைந்தோம்.வானிலை மிதமாக இருந்தது. கோவிலை சென்று அடைய மாலை மணி ஆறு ஆகிவிட்டது அந்தி நெருங்கி விட்டது.

 எங்களது அதிர்ட்டம் கூட்டம் அதிகம் இல்லை. கோவிலுக்கு சென்ற வுடன் புகைப்படங்களை எடுத்து தள்ளினோம்.பெரிய கோவில்  கோபுரத்தின் முன்பு நின்று புகைப்படம் எடுப்பது தமிழராக ஒரு பெருமை தானே.

படங்கள் எடுத்து முடித்த பின் சில மணித்துளிகள் அமர்ந்து  ஒலிபெருக்கியில் சொல்லி கொண்டு இருந்த சிவபுராணம் கேட்டு விட்டு இறைவனை வழிபட சென்றோம், நல்ல காட்சி, பொறுமையாக இறைவனை தொழுவ நேரம் கிடைத்தது . நான் ஹிந்துத்துவ நம்பிக்கை இல்லாதவன் என்பதால் இறைவனை வணங்கி ,எமது விருப்பகளை மட்டும் அவனிடம் தெரிவித்து விட்டு ..திருநீர் பெற்று கொண்டு கோவிலின் அழகினை காண சென்று விட்டேன்

அதிக நேரம் இல்லாததால் பெரும் பகுதியை காண முடியவில்லை.ராஜ ராஜன் எழுப்பிய பெரிய கோபுரம் , நந்தி மற்றும் கோயில் மண்டபங்களை மட்டுமே காண முடிந்தது.நாயக்கர்கள் எழுப்பிய சிறய கோவில்களை கண்டு ரசிக்க முடியவில்லை.சில புகைப்படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது 

பெரிய கோயில் தேசிய மரபுரிமையாக மாற்ற பட்டதாலோ என்னமோ கைங்கரியங்கள் அவ்வளவாக ஒன்னும் இல்லை.இறை சேவை செய்யும்... சொற்ப அரசு சம்பளம் பெரும் அர்ச்சகர்கள் காணிக்கையை எதிர்ப்பர்த்தவர்களாக இருப்பதை பார்பதற்கு வருத்தமாக இருந்தது.சில இளம் ஆண்கள் லுங்கி உடுத்திக்கொண்டு கோயில் தின்னைகில் அமர்ந்து கதை பேசி கொண்டு இருந்தார்கள்.சென்னை திரும்ப இரவு பத்து மணிக்குதான் வண்டி என்பதால். சரி எல்லாரும் உக்காந்து கதை பேசுவோம் என்று முடிவு செய்து, புற்களில் அமர்ந்து கோவிலை ரசித்த படியே பல கதை பேசினோம்.வழக்கம் போல் கதை ராச ராசன் காலத்தில் இருந்து ஆரம்பித்து எங்கு எங்கோ சென்று அலுவல் சுமையில் வந்து முடிந்தது. 

போகலாம்! என்ற பொழுது, இரவு நேர இறுதி வழி பாடு நடந்தது, மீண்டும் வழிபாடு செய்தோம்.இறைவனை சோதி வடிவாக பார்த்து மகிழ்வது ஒரு உணர்வு அதை விவரிக்க முடியவில்லை. ஒரு வேலை மனிதனின் அறிவு , ஞானத்தை அடைவதருக்கு ஆறாம் அறிவில் இருந்து முன்னேற எத்தனிக்கும் தருணமாக இருக்குமோ அது ?? என்பது எனக்கு தெரியவில்லை.

இறைவனை சங்குகள் முழங்க தேவாரம் பாடிகொண்டே பார்வதி இடம் கொண்டு சேர்த்தார்கள். அங்கு உமையாளை தரிசித்து,காவல் பைரவனுக்கு  வணக்கங்கள் தேரிவித்து விட்டு கிளம்பினோம். வீடு பேற்றை அடைவதை அருங்கட்ட்சியகதிளும் பெரிய கோவிலிலும் உணர்ந்தது நல்ல அனுபவம்.

ஆயிரம் வருடங்களுக்கு முன் பேரரசன் ராச ராசனும் , உலகை ஆண்ட, தன்னிகர் இல்லா ராசேந்திரனும் நடந்த ,அமர்ந்த, இறைவனை வணங்கிய,அதே இடத்தில் நானும் நின்றேன், என்னால் கால எந்திரத்தில் பயணிக்க முடியவில்லை ஆனால் மனக்கண்ணால் அவரை பார்க்க முடிந்தது வணங்கினேன்.பலகோடி நூறாயிரம் பலாண்டு வாழ்க.    

ரயில் நிலையம் வரும் வழியில் எழு சட்னி உடன் சில இட்லிகளை விழுங்கி விட்டு ( தத்தா கடை) சென்னை திரும்பினோம் . 

இன்று பல பொறியியல் படிப்பை படித்து- பயிற்சி /ஆராய்ச்சி செய்யும் பொறியாளர்கள் நம் முந்தைய தலைமுறையை போல் உன்னதமான படைப்புக்களை படைக்க முடிமா என்ற கேள்வி என் மனதில் எழுவதை தடுக்க இயலவில்லை. என்னை போன்றே இந்த பத்தியை  வாசிக்கும் பலர் மறுதலிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்    
 

0 கருத்துகள்:

Post a Comment